வைத்தியம்
சித்தர்களின் வைத்திய முறைகள் காலம் குறிப்பிட முடியாத பழமையானதாக இருக்கிறது. பண்டைத்தமிழரின் அறிவியல்அறிவின் சிகரமே சித்த வைத்தியமாகும். மனித குலத்தைக் காக்கும் பொருட்டு, அன்றைய கலாச்சாரத்திற்கேற்பவும், மனித வாழ்க்கை முறைக்கு தேவையான, அனைத்து ஆரோக்கிய முறைகளையும் மிக எளிய வைத்திய முறைகளை, அனைவரும் செய்துகொள்ளும் பொருட்டு தந்தனர். அவ்வைத்திய முறைகளை, அவர்களின் இருப்பிடத்திலே அருகில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு, மனித குலத்தைக் காத்து வந்தனர். சித்த வைத்தியர்கள் அல்லது சித்தர்கள், உடல்நலன் பாதிக்கப்பட்டு நோயுடன் வருபவர்களின் கையின் நாடித் துடிப்பின் தன்மைகளை அறிந்து கொண்டு, நோயினை நீக்குவர். மூலிகைச் செடிகளின் இலைகளைப் பொடியாக்கியும், தைலமாகவும் தருவர். இம்மருந்து உடலில் மெதுவாகக் கரைந்து, இரத்தத்துடன் கலந்தபின் நோய் முற்றிலும் குணமாகி விடும். இதனால் எந்த விதமான பின் விளைவும் இருக்காது. தீராத வியாதிகளும், தீர்த்து வைத்திடும் வைத்தியம் சித்த வைத்தியம் ஆகும்
மக்கள் அனைவரும், ஒழுக்கந்தவறாமல் வாழவேண்டும் என்றும், பொய், சூது, கொலை, குடி, விபச்சாரம், கூடா ஒழுக்கம் ஆகியவை உடல் நோயை உண்டாக்கும் என்றும் யோகப்பயிற்சியிலே வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்றும் உடல் வலிமையுடன் நீண்டநாள் வாழ முடியும் என்றும் சித்தர்கள் பல பாடல்கள் பாடியுள்ளனர்.
"உலகில் சாவாமைக்கு வழிகாண முடியும் என்ற உயரிய நோக்கம் கொண்ட மருத்துவ முறை சித்த மருத்துவமேமூளையின் ஆற்றல்
ஐவகை நிலங்கள்:
----------------------------------
குறிஞ்சி நிலம்.
முல்லை நிலம்.
மருத நிலம்.
நெய்தல் நிலம்.
பாலை நிலம்.
குறிஞ்சி நிலம்:
குறிஞ்சி நிலமானது, மலையும் மலைச்சார்ந்த இடமாகும். இவ்விடம் கபம் மிகுந்தது. மலைப் பூமியில் விளைகின்ற எல்லா விதமான பொருள்களுக்கும் வலிமை உண்டு.
குறிஞ்சி மக்களின் பாதிப்புகள்:
இப்பூமியில் வாழ்பவர்களுக்கு இரத்தத்தை முறிக்கின்ற சுரமும், வயிற்றில் ஆமைக்கட்டியும் உண்டாகும்.
முல்லை நிலம்:
முல்லை நிலமானது காடும் காடு சார்ந்ததும் ஆகும். ஆடு, எருது, பசு இவற்றின் கூட்டம் அதிகமாகக் காணப்படும்.
முல்லை வாழ் மக்களின் பாதிப்புகள்:
பித்த தோஷம் அதிகரிப்பதற்கு ஏற்ற இடமாகும். அவ்வாறு இல்லையானால் வாத தோஷம் நிலையாக இருக்கும். அவ்விரு தோஷங்களால் பலவித நோய் வேறுபாடுகள் ஏற்படுகிறது.
நெய்தல் நிலம்:
நெய்தல் நிலமானது, கடலும் கடல் சார்ந்த இடமாகும். மிகுந்த உவர்ப்பை பெற்றிருப்பதினால் பித்த வாயு தங்குவதற்கு ஏதுவான இடமாக அமைகிறது.
நெய்தல் மக்களின் பாதிப்புகள்:
இந்நிலங்களில் வாழ்பவர்களின் உடலில் நுட்பமான இடங்களில் சிலேஷ்ம நீரானது கண்டு தடித்தலை உண்டாக்கும். இது தவிர பாதம் முதலான கடினமான உறுப்புகளில் யானைக்கால் நோயையும், குடல் அண்ட விருத்தியையும் உண்டாக்கும்.
மருத நிலம்:
மருத நிலம் என்பது வயலும் வயல் சார்ந்த இடமாகும்.
மருத நில மக்களின் சுகாதாரங்கள்:
இங்கு நீர்வளம் அதிகமாகக் காணப்படுவதால் வாத பித்த சிலேஷ்மங்களால் உண்டாகின்ற நோய்களை நீக்கும். இது தவிர அந்த நிலத்தில் விளைகின்ற அறுசுவை உணவு உண்பவர்கள் என்றாலே நோய் விட்டுப் போகும். அத்தகையப் பெருமை வாய்ந்தது மருத நிலம்.
பாலை நிலம்:
பாலை நிலமானது நீரும் நிலமும் இல்லாததாகும்.
பாலை நில மக்களின் பாதிப்புகள்:
இந்நிலம் தீமை விளைவிக்கக் கூடியது. இந்நிலம் வாத பித்த கபங்களுக்கும், அவற்றை சார்ந்து வரும் அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்ற இடமாகும்.
உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாக அமைவது உணவு, உடை, உறைவிடம் ஆகும். எனவே ஐவகை நிலங்களை ஒப்பிட்டு பார்க்கையில் மருத நிலமே சிறந்தது.
தண்ணீர் வகைகள்:
----------------------------------
மழை நீர்.
ஆலங்கட்டி நீர்.
பனி நீர்.
தண்ணீர்.
ஆற்று நீர்.
குளத்து நீர்.
ஏரி நீர்.
சுனை நீர்.
ஓடை நீர்.
கிணற்று நீர்.
ஊற்று நீர்.
அருவி நீர்.
நதி நீர்.
பாறை நீர்.
அடவி நீர்.
சிவந்த நீர்.
கருமை நீர்.
வயல் நீர்.
நண்டுக்குழி நீர்.
பாசி நீர்.
பலவகை நீர்.
குளிக்க.
குடிக்க உதவாத நீர்.
நீராகார நீர்.
காடி நீர்.
உப்பு நீர் .
கடல் நீர்.
நாவல் நீர்.
கருங்காலி நீர்.
இலவு நீர்.
வாழை நீர்.
மட்டை.
இளநீர்.
வெந்நீர்.
மழை நீர்:
சீதளம் பொருந்திய மழை நீரால் இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் குளிர்ச்சி், நல்லறிவு, சுக்கிலம், சோணிதம் ஆகிய நோய்கள் நீங்கும்.
ஆலங்கட்டி நீர்:
குளிர்ச்சியை உண்டாக்கும். சிலேஷ்மம், பிரமேகம், பெரும்பாடு, கண்ணின் புகைக் கம்மல், கை கால் எரிச்சல், விக்கல், சுவாசம், மயக்கம் முதலியவற்றைக் குணப்படுத்தும்.
பனி நீர்:
சூரிய உதயத்தின் போது பனி நீரைப் பருகினால் சொறி, கிரந்தி, குஷ்டம், தாபம், காசம், கிராணி, தனி வாதம், திரிதோஷம், தேக வறட்சி, நீரழிவு ஆகியவை அடியோடு நீங்கும்.
தண்ணீர்:
தண்ணீரின் குணமானது மண்ணின் குணமே அல்லாமல் வேறு இல்லை. ஆறு, குளம், ஏரி, மடு, கிணறு, சுனை என்னும் ஆறுவகை இடங்களில் தங்கி அவற்றின் குணங்களையே பெற்றுள்ள நீரைப் பருகினால், அந்தந்த நீருக்கு ஏற்ப இயல்பு என்று கூறுவர்.
ஆற்று நீர்:
வாதம், பித்த கோபம், கபதோஷம், தாகம், உடலில் பித்த சம்பந்தமான சில நோய்கள் இவற்றைப் போக்கும். சுக்கில விருத்தியை உண்டாக்கும்.
குளத்து நீர்:
வாத ரோகத்தை விருத்தி செய்வதோடு, மதுப்பிரமேகத்தையும், சீதளத்தையும் உண்டாக்கும்.
ஏரி நீர்:
துவர்ப்புச் சுவையுடைய ஏரி நீர் வாயுவை அதிகரிக்கச் செய்யும்.
சுனை நீர்:
கற்சுனை நீரானது வாத பித்த தோஷமாகும். அதை ஒருநாள் வைத்து விட்டு மறுநாள் பருகினால் குளிர்ச்சி நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். சுனை நீரை அருந்தியவருக்கும் அந்நீரில் குளித்தவர்க்கும் இருமலோடு கூடிய சீதசுரம், வாதகோபம், கபவாத ரோகம், பயித்திய தோஷம் ஆகியவை உண்டாகும்.
ஓடை நீர்:
துவர்ப்பும் மதுரமும் உடைய ஓடை நீ்ர் அருந்துபவர்களுக்கத் தாகம் உண்டாகும். தோள் வலிமை உண்டாகும்.
கிணற்று நீர்:
மிகுதியான தாகம், உஷ்ண தீபனம், தேக அழற்சி, சூலை, சரீரத்து உட்கடுப்பு, இடுப்பு வலி, மயக்கம், வீக்கம், பித்த தோஷம், சுவாஷம் ஆகியவை நீங்கும்.
ஊற்று நீர்:
மதுராமான ஊற்று நீரானது மிகுந்த பித்தத்தை உண்டாக்கி உடனே சாந்தி செய்யும்.
அருவி நீர்:
மலை அருவி நீரானது பிரமேகத்தையும் இரத்த பித்த ரோகத்தையும் நீக்கும். சிலேஷ்மத்தையும் தேக பலத்தையும் உண்டாக்கும்.
ஒன்பது வகையான நதி நீர்:
கங்கை நதி நீர்.
யமுனை நதி நீர்.
கோதாவரி நதி நீர்.
துங்கபத்திரா நதி நீர்.
நரமதா நதி நீர்.
சிந்து நதி நீர்.
வைகை நதி நீர்.
காவிரி நதி நீர்.
தாமிரபரணி நதி நீர்.
கங்கை நதி நீர்:
அக்கினியை நிகர்த்த கங்கை நதி நீரை அருந்தினால் உட்சூடு, மந்தாக்கினி, ஷயம், பித்த கோபம், வாதாதிக்கம், கீழ்ப்பிரமேகம், தேக எரிச்சல், தாகம் ஆகியவை நீங்கும்.
யமுனை நதி நீர்:
அதிக சுரம், வெண்குஷ்ட ரோகம், இருமல், வெட்டை, தாகம், பித்த வாந்தி, சுவாசம், அயர்வு, விந்து நஷ்டம், வெண்பாண்டு ரோகம் ஆகியவை அழியும்.
கோதாவரி நதி நீர்:
முத்தோஷ கோபம், பலவிதச் சொறிகள், உள்சிரங்கு, நடுக்கல் சுரம் ஆகியவை நீங்கும்.
துங்கபத்திரா நதி நீர்:
வெப்பம், எலும்புருக்கி நோய், கரப்பான், விந்து நஷ்டம்,கண் புகைச்சல், இருமல் மூத்திரக் கிரிச்சுரம், சரீரத்தின் நிற மாறுதல் ஆகியவற்றை நீக்கம்.
நர்மதா நதி நீர்:
வாந்தி, சுரம், விக்கல், காமாலை, வயிற்று உப்புசம், கைகால் எரிச்சல், பித்த வாந்தி, கிரிச்சரம், கபச் சேர்க்கை, சிலேஷ்ம வாத தொந்தம் ஆகியவை நீங்கும்.
சிந்து நதி நீர்:
சரீரக் குடைச்சல், புத்தி மயக்கம், வெட்டைப் புண், வியர்வை, தாது நஷ்டம், அஸ்தி சுரம், வெள்ளை, மூத்திர கிரிச்சரம், தாகம் ஆகியவை விலகும்.
வைகை நதி நீர்:
வாத மேகம், குஷ்டம், சோபா ரோகம், கரப்பான், தேக எரிச்சல், தாகம் பாதஷேபக வாதம், தாது நஷ்டம், சில விஷங்கள் முதலியன நீங்கும்.
காவிரி நதி நீர்:
வயிற்று உப்பிசம், இருமல், இரைப்பு, வீக்கம் கபக்கட்டு, ஆயாசம், சலதோஷம், ரத்த குன்மம், நாவறட்சி, ஆகியவை நீங்கி அழகு உண்டாகும்.
தாமிரபரணி நதி நீர்:
சகல சுரம், பித்ததோஷம், கண் புகைச்சல், உட்சுரம், சுவாசநோய், ஷயம், எலும்புருக்கி, கை கால் எரிவு, அதிக தாகம் ஆகியவை விலகும்.
மூவகையான குளத்து நீர்:
தாமரைக் குளத்து நீர்.
அல்லிக்குளத்து நீர்.
அதிகக் குளிர்ச்சியுள்ள குளத்து நீர்.
தாமரைக் குளத்து நீர்:
வாத பித்த தொந்தம், புராதன சுரம், அதிக தாகம் ஆகியவை விலகும்.
அல்லிக்குளத்து நீர்:
அஜீரண பேதி, சொறி, புண், சுரம், கண்ட நோய், தாது நஷ்டம் இவைகளை உண்டாக்கும்.
அதிக குளிர்ச்சியுள்ள குளத்து நீர்:
தேகக் கட்டு விடல், விக்கல், வாத சிலேஷ்மம், தொந்தம், வண்டுக்கடி, வாந்தி, குளிர், காசம், வயிற்று வலி ஆகியவை உண்டாகும். அதில் சரீரம் ஊறுமானால் பலநோய்கள் உண்டாகும்.
பாறை நீர்:
உவர்ப்பைத் தருகின்ற பாறை நீரினால் தேகம் சில்லிடல், வாத கோபம், தீராச்சுரம் ஆகியவை உண்டாகும்.
பாறை நீர் இருவகைப்படும்:
சுக்கான் பாறை நீர்.
கரும்பாறை நீர்.
சுக்கான் பாறை நீர்:
மூத்திரக் கடுப்பு, நெஞ்சில் கபக்கட்டு, பித்தாதிக்கம், கப சம்பந்தமான நோய்கள், மனோ வியாதி ஆகியவற்றை உண்டாக்கும். ஆனால் மகாவாத ரோகத்தை விலக்கும்.
கரும்பாறை நீர்:
வீக்கம், வாந்தி, பெரும்பாடு, பித்த சுரம் மயக்கம், நீர்க்கடுப்பு, தாகம் இவற்றை விலக்கும். வீரியம், புத்தி, அழகு ஆகியவற்றை உண்டாக்கும்.
அடவி நீர்:
காட்டாற்று நீரானது அதிக சீதளம், தேக பாரிப்பு, இளைப்பு சரீரம், வயிறு, நாவி ஆகிய இடங்களில் வெப்பம், தலைக்கனம், கடும் விஷச் சுரம் இவை உண்டாகும்.
சிவந்த நீர்:
சிவந்த நிறமுடைய நீரால், இருமலால் உண்டான பித்த உஷ்ணம் விலகும். சுரமும் எரிச்சலும் விந்து நஷ்டமும் உண்டாகும்.
கருமை நிற நீர்:
வாந்தி, கரப்பான், உஷ்ணம், எரிச்சல், மார்ப்புச் சளி, காசம், சுவாசம், விடாச்சுரம், புளித்த ஏப்பம், சலதோஷம், தாகம், நடுக்கல்ஆகியவற்றை விலக்கும். பசி உண்டாகும்.
வயல் நீர்:
நெல் கழனிகளில் இருக்கும் நீர் பிரமேகம், தாகம், தாகம், வெள்ளைச்சுரம், மூர்ச்சை, ரத்த காசம், சுரவேகம் இவற்றை விலக்கும். சப்த தாதுக்களும் குளிர்ச்சியடைந்து தேகம் வலுவாகும்.
நண்டுக் குழி நீர்:
வயல்களில் இருக்கின்ற நண்டுக் குழி நீரினால் வமனம், வெப்பம், நீங்காத விக்கல், எரிச்சல் ஆகியவை நீங்கும்.
பாசி நீர்:
வழு வழு என இருக்கும் பாசி நீரானது பல வியாதிகளை உண்டாக்கும்.
பலவகை நீர்:
ஊற்றுள்ள ஓடை நீர் எல்லா விதமான நோய்களையும் தீர்க்கும் கட்டுக் கடை நீரால் குடல் வாதம் உண்டாகும். பனி மாசுபடிந்த நீரானது பித்த கோபத்தை விலக்கும். சருகு ஊறிய நீரானது சுர ஆதிக்கத்தை உண்டாக்கும். ஜீவ நதி நீரால் அழகு உண்டாகும். நிழலை அடைந்த சுனை நீரால் பெரு வயிறு உண்டாகும். மழைநீர் தளர்ந்த தேகத்தை வலிமையுடையதாக்கும். இறைக்காத கிணற்று நீர் ஷயத்தை வளர்க்கும். வருவதும் போவதுமாக உள்ள குளத்து நீரால் நோய் தோன்றாது. மாறாத குளத்து நீர் நோயை உண்டாக்கும்.
குளிக்க, குடிக்க உதவாத நீர்:
சூரிய, சந்திர கிரணங்கள் காற்று முதலியவை அணுகாததும், கிருமி துர்வாசனை, சேறு தடித்தல், சருகு உதிர்தல், ருசி இல்லாத நீர் குடிக்கவோ குளிக்கவோ ஆகாது. அவ்வாறு நேர்ந்தால் பலவிதமான நோய்கள் உண்டாகும்.
நீராகார நீர்:
மதுரமான நீராகார தெளிந்த நீரானது வாத பித்த சிலேஷ்ம வறட்சிகளையும், தாபத்தையும் விலக்குவதோடு சுக்கிலத்தையும், அழகையும் விருத்தி செய்யும்.
காடி நீர்:
பழைய காடி நீரால் பித்த மயக்கமும் சோபா ரோகமும் சிற்சில ரோகங்களும் அசீரணமும் வாதாதி சாரமும் அதிகமாகி ஔஷதங்களின் நற்குணங்களும் விலகும்.
உப்பு நீர்:
சரீரத்தில் குத்துகின்ற வாயுவும், அற்ப உணவும், பித்தம் அதிகரிப்பும், வாய் துவர்ப்பாக ஊறும் நீரும் அதிகரிக்கும். குடல்வாதம் நீங்கும்.
கடல் நீர்:
கவிகை என்னும் ஒருவித உதரரோகம். பெருவியாதி, சரீரக் குடைச்சல், ரத்த குன்மம், வாத குணம், உதிர வாதம், நீராமைக்கட்டி, பெருவயிறு, பிலிகம் பற்றிய நோய் ஆகியவை நீங்கும். கடல் நீரைக் காய்ச்சிப் பருகினால் வாத குன்மம், குடற்கரி ரோகம், மல சல பந்தம், மிகுந்த உழைப்பினால் வந்த நோய்கள், தேகக் கடுப்பு, சோணித வாதம், நடுக்கு வாதம், நாக்குப் பிடிப்பு, பல் இடுக்கில் ரத்தம் வருதல், பல் விழுதல், சந்நி தோஷம் ஆகியவை விலகும்.
நாவல் நீர்:
நாவல் வேர் ஊறிய நீரானது பித்தாதி சாரத்தையும், மது மேகத்தையம் நீக்கும். சுக்கில விருத்தி, அதிக குளிர்ச்சி, தேக பலம், சுரம், சிலேஷ்ம கோபம், அக்கினி மந்தம் இவற்றை உண்டாக்கும்.
கருங்காலி நீர்:
கருங்காலி வேர் ஊறிய நீரானது பித்த ஷயம், குஷ்டம், பித்த குன்மம், மகோதரம் பெரும் பூநாகக்கிருமி, ரத்த பசையற்ற திமிர்வாதம், நீரழிவு ஆகியவை நீங்கும்.
இலவு நீர்:
இலவமரத்தின் வேர் ஊறிய நீரால் அஷ்ட குன்மம், நீரழிவு, உட்சூடு, ரத்தம் மற்றும் ரணக்கிருமி ஆகியவை விலகும்.
வாழை நீர்:
வாழைக் கிழங்கில் ஊறுகின்ற சீதோஷ்ண நீரானது பெருவயிறு, ரத்த கிரீச்சுரம், எரி மூத்திரம், அற்பவிரணம், சோமரோகம், அயர்வு கழலை நோய்பாண்டு, எலும்பு உருக்கிமுதலியவற்றை விலக்குவதோடு தேகத்துக்கு வலிமையை உண்டாக்கும்.
மட்டை நீர்:
தெங்கு, பனை முதலிய மட்டைகளில் பழிந்த நீரினால் மூத்திர கிரிச்சரம், நீரழிவு, பவுத்திர ரோக விரணம், வயிற்றுக் கடுப்பு ஆகியவை நீங்கும்.
இளநீர்:
இளநீரை முறையாகப் பருகினால் வாத கோபம், பித்த தோஷம், வெப்பம், தேகபாரிப்பு, சுபாதிக்கம், மன அழுத்தக் கோபம், வமனம், அதிசாரம் ஆகியவை நீங்கும். மனத்தெளிவு, நேத்திரத் துலக்கம், குளிர்ச்சி, மூத்திரப் பெருக்கம், மலப்போக்கு ஆகியவை உண்டாகும். இது உஷ்ண சீதளத்தை உடையது.
இளநீரின் வகைகள்:
செவ்விள நீர்.
பழைய இளநீர்.
உணவுக்கு முன் அருந்தும் இளநீர்.
உணவுக்கு பின் அருந்தும் இளநீர்.
மூன்று வித இளநீர்.
புதிய பழைய இளநீர்.
கேளி இளநீர்.
பச்சை இளநீர்.
மஞ்சள் கச்சி இளநீர்.
அடுக்கு இளநீர்.
கரு இளநீர்.
சோரி இளநீர்.
ஆயிரங்கச்சி இளநீர்.
குண்டறக் கச்சி இளநீர்.
செவ்விள நீர்:
தினமும் செவ்விள நீரைப் பருகினால் பித்த விருத்தி, தாகம், வழி நடையால் ஏற்பட்ட இளைப்பு, அயர்வு பற்பல ஷயம் ஆகியவை நீங்கும்.
பழைய இளநீர்:
அருசி, விதாகம், நாள்பட்ட பழைய மலம் ஆகியவை நீங்கும். ஜடராக்கினி அதாவது வயிறு எரிதல் உண்டாகும்.
உணவுக்கு முன் அருந்தும் இளநீர்:
காலை ஆகாரத்துக்கு முன் இளநீர் பருகினால் பசி நீங்கும். குன்மம் உண்டாகும். மாலையில் அருந்தினால் பெரிய கிருமிகள் ஒழியும்.
உணவுக்கு பின் அருந்தும் இளநீர்:
உணவு உண்டபின் இளநீரைப் பருகினால் வாத பித்த கோபம் தனியும். தனிப்பித்த தோஷம் விலகும். தாராளமாக மலம் கழியும். அதி தீபனமும் உண்டாகும். நோய் அணுகாது. தேகம் மினுமினுக்கும்.
மூன்று வித இளநீர்:
மட்டை சீவி தண்ணீரில் போட்டுக் காய்ச்சி ஆற்றிய இளநீரானது இருமல், சலதோஷம், வறட்சி, சுரம் இவற்றைப் போக்கும். செவ்விள நீரானது பித்த தோஷத்தை நீக்கும். கெவுளி பாத்திரை என்னும் இளநீரை அருந்தினால் உஷ்ணம் நீங்கும்.
புதிய பழைய இளநீர்:
இள வழுக்கையுடைய புதிதாகப் பறிக்கப்பட்ட இளநீரைப் பருகினால் பித்த கோபம் விலகும். பழைய இளநீரைப் பருகினால் ஜலதோஷம் முதலான ரோகங்கள் உண்டாக வாய்ப்பு உண்டு.
கேளி இளநீர்:
இதைப் பருகுபவர்க்கு ரத்த மேகம், மலக்கிருமி, விதாகம், மந்தாக்கினி, கரப்பான், அதிசுரம் ஆகியவை நீங்கும்.
பச்சை இளநீர்:
இதை அருந்தினால் சீழ்ப்பிரமேகம், பழைய சுரம், கபாதிக்கம், எரிகிருமி, யானைச் சொறி, கண்நோய் இவற்றைப் போக்கும்.
மஞ்சள் கச்சி இளநீர்:
பித்ததோஷம், சோபை, சிலேஷ்ம ஆதிக்கம், பழைய சுரம் ஆகியவை விலகும்.
அடுக்கு இளநீர்:
நித்திரைக்கு முன் அடுக்கு இளநீரை அருந்தினால் கபதோஷமும், மலப்பை பற்றிய கிருமியும் போகும். நன்மையும் உண்டாகும்.
கரு இளநீர்:
கருமை இளநீரால் கப ஆதிக்கமும், புழு நெளிகின்ற கரப்பானும் நீங்கும். ஜேகம் மகிழ்ச்சியும் உண்டாகும்.
சோரி இளநீர்:
இதைப் பருகினால் வீக்கமும், வயிற்றிலுள்ள பூச்சியும், சன்ன கிருமியும் போகும். தேகம் அழகாகும். தெளிவான பேச்சு உண்டாகும்.
ஆயிரங்கச்சி இளநீர்:
வெப்பமும், பசியும் ஆமவாதமும் நீங்குவதோடு கபம், தொந்தம், நமைச்சல், பிரணஞ் சூழ் குன்மம் ஆகியவை தீரும்.
குண்டற கச்சி இளநீர்:
இதனால் அருசி, விதாகம், நாள்பட்ட பழைய மலம் ஆகியவை நீங்கும். ஜடராக்கினி உண்டாகும்.
வெந்நீர்:
அளவோடு குடிக்கும் வெந்நீரினால் நெஞ்சு எரிவு, நெற்றி வலி, நீங்காத புளியேப்பம், குன்மம் சீதக்கட்டுச்சுரம், காசம் இவை நீங்கும்.
வெந்நீரின் வகைகள்:
காய்ச்சி ஆறிய வெந்நீர்.
கால்பாகம் அரைபாகம் காய்ந்த வெந்நீர்.
முக்கால் பாகம் காய்ந்த வெந்நீர்.
உணவுக்கு முன், பின், மத்தியில் அருந்தும் வெந்நீர்.
பொற்கெண்டி வெந்நீர்.
வெள்ளிக்கெண்டி வெந்நீர்.
உலோகங்களில் பயன்படுத்தும் வெந்நீர்.
பஞ்சலோக் கிண்ணத்தின் வெந்நீர்.
இரும்புக் கெண்டி வெந்நீர்.
காய்ச்சி ஆறிய வெந்நீர்:
காய்ச்சி ஆறிய வெந்நீரைக் குடித்தால் உழலைநோய், வீக்கம் பேதியால் இளைத்த பித்த கோபம், மூர்ச்சை, சில் விஷங்கள், வாந்தி, மயக்கம், சுக்கில மேகம், திரிதோஷம், கண்வலி, செவிக்குத்தல், சூலை, குன்மம், சுரவேகம், கோழை வாதாதிக்கம் இவை தீரும்.
கால்பாகம் அரைபாகம் காய்ந்த வெந்நீர்:
வைத்த அளவில் கால்பாகம் சுண்டிய வெந்நீரால் பித்த கோபம் நீங்கும். அரைபாகம் சுண்டிய வெந்நீரால் வாத பித்த தோஷம் நீங்கும். அதை மறுநாள் வைத்து அருந்தினால் திரிதோஷம் கோபம் விலகும்.
உணவுக்கு முன், பின், மத்தியில் அருந்தும் வெந்நீர்:
உணவுக்கு முன் வெந்நீரைக் அருந்தினால் பசி குறையும். அதன் பிறகு குடித்தால் நன்மை உண்டாகும். சாப்பிடும் போது நடுவில் அருந்தினால் பசியும் மத்தியாகும். மேலும் இவை வாத சுரத்தை நீக்க வல்லது.
முக்கால் பாகம் காய்ந்த வெந்நீர்:
முக்கால் பாகம் சுண்டிய வெந்நீரால் வாத விருத்தி, குளிர் நடுக்கல், கொடுஞ்சுரம், பலவிதமான பேதி, திரிதோஷங்கள் நீங்கும்.
பொற்கெண்டி வெந்நீர்:
வெந்நீரைப் பொற் கெண்டியில் ஆற வைத்து அருந்தினால் வாதவிருத்தி, கபகோபம், அரோசகம், சரீர உஷ்ணம், சுரம் இவை நீங்கும். சுக்கிலமும், நல்லறிவும் ஸ்பரிச ஞானமும் உண்டாகும்.
வெள்ளிக்கெண்டி வெந்நீர்:
எட்டில் ஒரு பாகம் காய்ச்சிய வெந்நீரை சரிகை வெள்ளிக்கெண்டியில் ஊற்றிச் சாப்பிட்டால் உஷ்ணம், தாகம், குன்மம், பித்தம் இவை விலகும். தேகத்துக்கு வலிமையும், புஷ்டியும் உண்டாகும்.
உலோகங்களில் பயன்படுத்தும் வெந்நீர்:
தாமிரக் கிண்ணத்தின் வெந்நீர் கண் புகைச்சலையும், ரத்த பித்த நோயையும் நீக்கும். வெள்ளிக்கிண்ணத்து வெந்நீர் கப நோயை அகற்றும்.
பஞ்சலோக் கிண்ணத்தின் வெந்நீர்:
மூன்று விதமான தோஷங்களை நீக்க வல்லது. வெண்கலப் பாத்திர வெந்நீர் உதிரத்தைப் பெருக்கும். கெண்டில் காய்ந்த வெந்நீரை ஆற்றிக் குடித்தால் சுரம், சிரங்கு, அசதி, கை கால் இடுப்புக் குடைச்சல் நீங்கும்.
இரும்புக் கெண்டி வெந்நீர்:
பாண்டு ரோகம் நீங்கும். தாது, விருத்தி, நரம்புகளுக்கு உறுதி, உடலில் சீதோஷ்ணம் உண்டாகும்.
“சுத்தமான நீரைப் பருகுவோம்; சுகாதாரமான வாழ்வு வாழ்வோம்”.
பால் வகைகள்:
---------------------------
பசும் பால்.
தாய் பால்.
எருமைப் பால்.
ஆட்டுப்பால்.
குதிரைப்பால்.
ஒட்டகத்தின் பால்.
கழுதைப்பால்.
பாத்திர வேறுபாட்டால் ஏற்படும் பால்.
ஆடை எடுத்த பால்.
தேங்காய் பால்.
ஆலம்பால்.
அத்திப்பால்.
பேயத்திப்பால்.
மட்டிப்பால்.
சங்கன் முட்செடிப்பால்.
மரத்தின் பால்.
கள்ளிப்பால்.
எருக்கம் பால்.
ஆமணக்கு பால்.
பிரம்ம தண்டின் பால்.
காய்ச்சும் பாலுக்கு நீர் அளவு.
பாலேடு.
பசும் பால்:
பசுவின் பாலானது பாலருக்கும், விருத்தருக்கும், சுரமும், விரணம், சூலை பிரமேகம், துர்ப்பலம், அதிகஷ்கரோகம் ஆகியவைகள் உடையவர்களுக்கும் பயன்படும்.
பசும் பாலின் குணநலன்கள்:
பசும் பாலானது பித்த கோபத்தை தணிக்கும்.வாத தோஷத்தைக் குணப்படுத்தும்
கப ரோகத்தைத் தீர்க்கும்.திரிதோஷத்தை விலக்கும்.
கண்ணோய், ஷயம் மற்ற பால்களின் தோஷங்கள், ரத்த பித்த ரோகம் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
பசுவின் பால் பித்த ரோகத்தை நீக்கும். தனுஷ் தம்ப வாதம், சுக்கில தாது, கப நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
பசுவின் பால் நீடித்த சிலேஷ்ம நோயைக் குணப்படுத்தும்.
வாதாதி மூன்று தோஷங்களையும் அகற்றும். சரீர சுகமும், மகிழ்ச்சியும் உண்டாகும்.
பகலில் கரக்கும் பசுவின் பாலானது குழந்தைகளுக்கு ஏற்றது. உட்சூட்டையும் வெப்பத்தையும் தணிக்கும்.ஆனாலும் பலவிதமான கபநோயையும், தாம்பூலம் புளிப்பு முதலியவை சேருமிடத்தை கெடுக்கும்.
பசுவில் சுரந்து இருக்கும் பாலை இரவில் கரக்கின்ற போது முறைப்படி காய்ச்சி அருந்தினால் தேக அழற்சி, கபரோகம், சுவாசம், பித்த கோபம், நேத்திர வியாதி, விந்துவின் கெடுதியால் அனுசரித்த சிற்சில ரோகங்கள் ஆகியவை நீங்கும். தேசத்தின் மினுமினுப்பும், சுக்கிலப்பெருக்கமும், மாதர் மேல் விருப்பமும் உண்டாகும். இது மன அழுத்தத்துக்கும் வழிவகுக்கும்.
தாய்ப்பால்:
தாய்ப்பாலானது ஏழு வகை தோஷங்கள், வெப்பம், சந்நிபாதம், வாத பித்த கப சுரங்கள், திரி தோஷங்கள், வாதகிரிச்சுரம், நாவறட்சி ஆகியவற்றை விலக்கி வலிமையைத் தரும். மருந்து அனுபானத்துக்கும், கலிகத்துக்கும் பயன்படும்.
எருமைப்பால்:
திமிர் வாயுவை உண்டாக்கும். தெளிந்த புத்திக்கூர்மையையும், நல்ல மருந்தின் குணத்தையும் கெடுக்கும்.
ஆட்டுப்பால் இருவகைப்படும்:
வெள்ளாட்டுப் பால்.
செம்மறியாட்டுப் பால்.
வெள்ளாட்டுப் பால்:
வாதம், பித்தம், தொந்தம், சுவாசம், சீதாதிசாரம், கபதோஷம், விரணம், வாதத்தால் உண்டான வீக்கம் முதலான துன்பம் நீங்கும். நல்ல பசி உண்டாகும்.
செம்மறியாட்டுப் பால்:
வாத ரூபமான செம்மறியாட்டுப் பாலானது பித்த சிலேஷ்மம், தொந்தம், வயிற்றுப் பிசம், மேல் சுவாசம் முதலியவற்றை உண்டாக்கும். பத்தியத்துக்கு ஆகாது வாயுவை அதிகரிக்கும்.
குதிரைப்பால்:
சுக்கிலப் பெருக்கத்தையும், சரீர வனப்பையும், புணர்ச்சியில் நாட்டத்தையும் உண்டாக்கும்.
ஒட்டகத்தின் பால்:
அக்கினி மந்தம், வாத சூலை, எண் வகைக் கரப்பான், கர்ணநாத செவிடு, அதிக இருமல், இரைப்பு இவற்றை உண்டாக்கும்.
கழுதைப்பால்:
கழுதைப்பாலானது அதிக மதுரத்தையுடையது. இது வாத நோயை, கரைப்பான், புண், தழுதளை ரோகம் உள்விப்புரிதிக் கட்டி, ஒட்டுக் கிரந்தி, சீழ்ப்பிரமேகம், சொறி சிரங்கு, அற்புத விரணம், சித்தப் பிரமை, பித்த தோஷம், கபநோய் இவற்றைப் போக்கும்.
பாத்திர வேறுபாட்டால் உண்டான பால்:
செம்புப் பாத்திரத்தில் காய்ச்சியப் பால் வாத சிலேஷ்மத்தைப் போக்கும். பொன் மண் பாத்திரங்களில் காய்ச்சிய பால் பித்த தோஷத்தைநீக்கும்.வெள்ளி வெண்கலம் இரும்புப் பாத்திரங்களில் காய்ச்சியப் பால் காச ரோகத்தைப் போக்கும்.
ஆடையெடுத்தப் பால்:
ஏடு நீக்கிய பாலால் அக்கினி மந்தமும் ஏழு தாதுக்களின் சீரணமும் உண்டாகும். வாத பித்த கப தோஷங்கள் நீங்கும்.
தேங்காய் பால்:
அதிக இனிப்பால் உணவை உள்ளே செலுத்துகின்ற தேங்காய் பாலால் வாத விகாரம், பித்தாதிக்கம், கரப்பான், சுக்கில விருத்தியும் ஆகும்.
ஆலம்பால்:
பிரமேகத்தை நீக்கும். ஆடுகின்ற பற்களை இறுக்கும். தலைக்கு குளிர்ச்சியையும், தாது புஷ்டியையும் தரும்.
அத்திப்பால்:
காரமும்,வெப்பமும் உள்ள அத்திப்பாலானது பித்தம், நீரழிவு, சூலை, ரத்த மூத்திர கிரிச்சரம் இவற்றை நீக்கும்.
பேயத்திப்பால்:
கணையுடைய பேயத்திப்பால் பாதபேத ரோகம், மேகசொறி, குஷ்டரோகத் தடிப்பு, மூளை விரணம் இவற்றை விலக்கும்.
மட்டிப்பால்:
நறுமணமுள்ள மட்டிப் பாலினால் தலைவலி, ஜலதோஷம், யானைக்கால், கப வாந்தி, அருசி ஆகியவைப் போகும்.
சங்கன் முட்செடிப்பால்:
சங்கன் வேர்க்கட்டையை மெல்லியதாகச் சீவி அதிலிருந்து பிழிந்த பாலானது சோபையையும், நீரேற்றத்தையும், சுரவேகத்தையும் நீக்கும்.
புங்க மரப்பால்:
மெல்லியதாகச் சீவிப் பிழிந்த புங்கம் பால் விரணத்தை நீக்கும். தேகத்தில் பொன் ஒளி உண்டாகும்.
தில்லை மரப்பால்:
பஷபாத வாதம், சன்னிபாதம், சூலை, குஷ்டரோகம், முடவாதம், அரமகண்டன் முதலான ஐந்து வகை வலிகள், சில விஷங்கள் என்பது விதவாத ரோகங்கள் ஆகியவை அகலும்.
திருகுக் கள்ளிப்பால்:
கஞ்ச வாதம், கிராந்தி, பெருநோய், சீதக்கட்டு, கிருமிரோகம், பக்கசூலை, கரப்பான் ஆகியவை நீங்கும்.
சதுரக் கள்ளிப்பால்:
வாதப்பிரமேகம், பெருவியாதி, கடி சூலை, வாதாதிக்கம், கிருமி நெளிகின்ற நுட்ட விரணம், கரப்பான் ஆகியவை விலகும். ஆறாத புண்கள், சதையிலுள்ள வரி கிரந்தி, தேக வறட்சி படை, பொரிக்கிரந்தி இவை நீங்கும். தோஷமற்ற மலமும் போகும்.
இலைக் கள்ளிப்பால்:
இதை முயல் செவிக் கள்ளி என்றும் கூறுவர். இதனால் செங்கரப்பான், செவிநோய், வாதவிகாரம், சூலை விசர்ப்பக் கிரந்தி, உள்விரணம் இவை நீங்கும்.
கொடிக் கள்ளிப்பால்:
கரப்பான், சொறி சிரங்கு, பெரு விரணம், அக்கினி, கீடக்கடி, குஷ்டம், அடிக்கடி வலி்க்கும் குன்மம் ஆகியவை குணமாகும்.
எருக்கம் பால்:
வாதக் கட்டிகளை கரைப்பதோடு, வாதநோய், சன்னிப்பாதம், ஐவகை வலி இவற்றைப் போக்கும்.
வெள்ளெருக்கம் பால்:
சுளுக்கும், மகாவாதமும், ஐவகை வலியும், சன்னி பாதமும், எலி விஷமும், குளிர்சுரமும் தீரும்.
காட்டாமணக்கின் பால்:
சிறுநீரோடு விழுகின்ற மேகம், வெள்ளை, வயிற்று வலி, குறி விரணம், சருமக்கட்டி ஆகியவை நீங்கும்.
எலியாமணக்கின் பால்:
எலி விஷம், பீஜ வீக்கம், வண்டுக்கடி முதலான பற்பல விஷம், பீலிக நோய், வயிற்றுவலி ஆகியவற்றை நீக்குவதோடு அதிக விரோசனத்தை உண்டாக்கும்.
பிரம்மதண்டின் பால்:
கண் கூசுதல், கண் உறுத்தல், கண்ணீர் வடிதல், கண் வலி, கண் சிவப்பு குணப்படுத்த வல்லது.
காய்ச்சும் பாலுக்கு நீர் அளவு:
பசு, வெள்ளாடு இவற்றி்ன் பாலுக்கு எட்டில் ஒரு பங்கு தண்ணீர் அளவும் எருமை, செம்மறியாடு இவற்றின் பாலுக்குச் சரி பங்கு தண்ணீர் அளவும் ஊற்ற வேண்டும்.
வெள்ளாட்டுப் பாலுக்கு நிகர்:
எந்தவிதமான பால்களுக்கும் சுக்கு, சிறுகாஞ்சொறி வேர் சேர்த்துக் காய்ச்சினால் அவை வெள்ளாட்டுப் பாலுக்கு நிகராகும்.
பாலேடு:
பாலில் உண்டாகும் ஏட்டினால் மன அழுத்த வியாதியும், கொடிய வாந்தியும், மூர்ச்சையும் நீங்கும். மிகுந்த பலம், சுக்கிலம், ஜடராக்கினி விருத்தியாகும். பலவிதமான உடல் அமைப்பு உடையவர்களும் இவற்றை சாப்பிடலாம்.
மருத்துவக் குணங்கள்:
பாலானது கால்சியம், வைட்டமின் “டி”, பாஸ்பரஸ் ஆகிய சத்துகளைக் கொண்டுள்ளது.
இதைப் பருகுவதால் உடல் வலிமைப் பெறும். தோல் மிருதுவாக மாறும்.
இதனால் மூளை வளர்ச்சியடையும்.
பாலில் கால்சியம் சத்து இருப்பதால் இவை எலும்பை வலுப்படுத்தும்.
இவை உணவை ஜீரணமாக்கும் குணத்தையும் பெற்றுள்ளது.




